திருச்சி: ரயில்களை பராமரிப்பதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டுவதாகவும், தமிழ்நாட்டில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை பெட்டிகள் தான் இணைக்கப்படுகின்றன எனவும், கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியப் போக்கையே ரயில்வே துறை காட்டுகிறது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் பேட்டி (Credits-ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் வீரசேகரன், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கூறிய அவர், “ரயில்வே தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி பி.என்.எம் கூட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றதாகவும், இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை நாங்கள் அவ்வப்போது கோரிக்கையாக வைத்து சரி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்தில் ஓடும் ரயில் பெட்டிகளை சரிவர பராமரிப்பது இல்லை, கட்டணம் மட்டும் பெற்றுக்கொண்டு ரயில்வே நிர்வாகம் இவ்வாறு செய்கிறது என்ற கண்டனத்தை பதிவு செய்தார்கள் எனவும், இதற்கு முக்கிய காரணம் தனியார் மயம்தான் எனத் தெரிவித்தார்.
ரயில்வே தொழிலாளர்களை வைத்து பராமரிப்பு செய்து வந்த நிலையில், நல்ல முறையில் தூய்மையாக ரயில் பெட்டிகள் இருந்ததாகவும், தற்போது அதிகமான தனியார்மயம் காரணமாக இது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், தனியார் மயத்தில் பலருக்கு குறைந்த சம்பளம் கிடைத்தாலும் வேலை உத்தரவாதம் கிடைப்பதில்லை எனவும், பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கத்தான் நாங்கள் தனியார் மயத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
பல்வேறு தனியார் மற்றும் ஒப்பந்ததாரர்கள் முறையாக பணியாற்றுவதில்லை என்றும், ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமே முறையாக பணியாற்றுவார்கள் எனவும் தெரிவித்தார். திருச்சி கோட்டத்தைப் பொறுத்தவரை, ரயில் அலுவலர்கள் கண்காணிப்பு செய்து வருகிற போதிலும், இது போன்ற நிலைமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனியார் மயத்தைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுக்க உள்ளதாக அறிவித்தார். மேலும், திருச்சி பொன்மலை பணிமனையில் வருடத்திற்கு 1,250 ரயில் கோச் பழுது பார்க்கப்படுகிறதாக தெரிவித்தார். திருச்சியில் கிட்டத்தட்ட 140 பெட்டிகள், 11 விரைவு வண்டி மற்றும் 10 பேசஞ்சர் வண்டிகளை தினமும் தூய்மை செய்து அனுப்பி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிமுறைகளா?- ஐஆர்சிடிசி விளக்கம் என்ன?