சென்னை: சில மாதங்களுக்கு முன்னதாக ஷவர்மா சாப்பிட்டு பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் குழிமந்தி சிக்கன் சாப்பிட்டு பல்வேறு நபர்கள் வாந்தி, மயக்கம், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி கெட்டுப்போன சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர் விளக்கியுள்ளார். அதில், "கேரளாவில் 'குழிமந்தி' சிக்கன் சாப்பிட்டு ஒருவர் உயிரிழப்பு மற்றும் 80க்கும் மேற்பட்டோர் மருத்துமனையில் அனுமதி என்று கேள்வி பட்டோம். முன்னதாக ஷவர்மா சிக்கன் சாப்பிட்டு தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் பல்வேறு நபர்கள் இறந்தனர்.
பழைய சிக்கன்: ஷவர்மா சிக்கன், குழிமந்தி சிக்கன் என்பது கணக்கில்லை. அவை அனைத்தும் பழைய சிக்கன்களாகும். அறை வெப்பநிலையில் (Room temperature) அதிக நேரம் வைத்து அவற்றை உண்பதால் ஏற்படும் இறைச்சியை 1 - 2 மணிநேரத்தில் சமைத்து உண்பது நல்லது. நேரம் கடக்கும் பட்சத்தில் கறிகளில் கிருமிகள் சேர்ந்து, வளர்ந்து, இனப்பெருக்கம் அடைந்து ஒரு சில நச்சுப்பொருள்களை (Toxin) உற்பத்தி செய்கிறது. இந்த பாக்டீரியா போன்ற நச்சுப்பொருள்களை உண்பதால் அவை உடலுக்குள் சென்று வளர்ந்து, பல்வேறு மடங்காக பெருகி, இரத்தம் முழுவதும் கலப்பதினால் வருவது செப்சிஸ் (Sepsis).
கெட்டுப்போன சிக்கனை கண்டறியும் முறை: வழக்கமாக இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் கறிகள், சாம்பல் (Gray) நிறத்தில் மாறும். வழக்கத்தை காட்டிலும் அதிக மணம் அவற்றிலிருந்து வீசும். ஆனால், அதிகளவில் மசாலா பொருள்கள் கறிகள் கெட்டுப்போயுள்ளதை மறைக்கும் அளவிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், அவை கெட்டுப்போயுள்ளதை கண்டறிய முடிவதில்லை.
கோடையில் அதிக இனப்பெருக்கம்:மற்ற காலங்களில் ஒப்பிடுகையில் கோடைக் காலங்களில் அதிகளவில் இனப்பெருக்கம் அடைகிறது. இதனால், இவற்றை உண்ணும் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது.