விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பின், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி பகவதி அம்மாள் முன்பு, மூவர் மீதும் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. 100க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், இருதரப்பு வாதங்கள் மற்றும் விசாரணைகளும் நிறைவு பெற்றது.
இந்த வழக்கில் பலர் மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும் தான் குற்றவாளிகள் என இறுதி செய்து குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.