ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வெளியூர் செல்லும் பொது மக்களின் விழிப்புணர்வுக்காக, வன்னியம்பட்டி காவல் நிலையம் சார்பில் சுவாரஸ்யமான பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளை கண்காணித்து பகல் மற்றும் இரவு நேரங்களில் வீட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடைபெற்றன. திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியோடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது அரையாண்டு விடுமுறை ஆரம்பமாகும் உள்ள நிலையிலும் அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ், ஆங்கில வருட பிறப்பு, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வருவதை முன்னிட்டு பொதுமக்கள் வழிபாட்டுத் ஸ்தலங்களுக்கும், சுற்றுலாவுக்கும் அல்லது உறவினர்கள் இருக்கும் ஊர்களுக்கும் செல்ல திட்டமிட்டு இருப்பர்.
இதையும் படிங்க:பாஜக பிரமுகர் கொலை; திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் கைது! பரபரப்பு வாக்குமூலம்..
அவ்வாறு வெளியூர் செல்லும் மக்களின் வீட்டை கண்காணித்து பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக, பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையிலும், அதே போல் சொல்லும் விஷயம் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் திரைப்பட நடிகர் வடிவேலு காமெடியை வைத்து விளம்பர பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர்.
அதில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் முன்னதாக அத்தகவலை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுமக்கள் தெரியப்படுத்தும் பட்சத்தில் அப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். வியாபார நோக்கில் வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மத்தியில், பொதுமக்களின் சேவைக்காக காவல்துறையினரின் இம்மாதிரியான வித்தியாசமான பிளக்ஸ் போர்டு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.