தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்; இன்றும் 14 தமிழக மீனவர்கள் கைது - தீர்வு தான் என்ன? - FISHERMEN ARREST ISSUE

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 ராமேஸ்வர மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளுடன் சிறை பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 2:51 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று கடலுக்குச் சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறை பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த கைது நடவடிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்வளத் துறையிடம் உரிய அனுமதி சீட்டுப் பெற்று, 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகு அதிலிருந்த 14 மீனவர்களை சிறை பிடித்து விசாரணைக்காக ஊர்காவல் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு (டிச.3) காங்கேஷன் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் காங்கேஷன் கடல் பகுதியில் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி, 2 விசைப்படகு மற்றும் அதிலிருந்த 18 மீனவர்கள் சிறை பிடித்து விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க:கடலுக்குச் சென்ற 6 மீனவர்கள் மாயம்; தேடும் பணியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரம்!

அதேபோல், நவம்பர் 12ஆம் தேதி, நாகப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 12 பேர் மற்றும் கடந்த நவ.10 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 21க்கும் மேற்பட்ட மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறை பிடித்துச் சென்றனர்.

இந்த வருடத்தில் (2024) தற்போது வரை 50க்கும் மேற்பட்ட படகுகளையும், 500க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற, இலங்கை கடற்படையின் தொடர் நடவடிக்கை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் அச்சத்திலும், கவலையும் உள்ளனர். மேலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details