திருச்சி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை கொழும்புவில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கப்பல் சேவைக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கைக்கு தரைமார்க்கமாக பாதை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கை, தனுஷ்கோடிக்கு இடையே உள்ள ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதற்கான விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா - இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டாலும், இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இலங்கையில், காற்றாலை மூலம் 500 மெகாவாட் அளவிலான பெரிய காற்றாலை மின் உற்பத்திக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் திருகோணமலை கிழக்கு துறைமுகம் அதற்கான கப்பல் போக்குவரத்திற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலுக்கு அடியில் குழாய் மூலமாக எண்ணெய் மற்றும் வாயுப் பரிமாற்றம் தொடர்பான சேவைகளுக்கும் இந்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. எங்களுடைய கட்சியைப் பொறுத்தமட்டில் எதிர்க்கட்சி கூட்டணியாக இருக்கிறோம். ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டியில் இருக்கிறோம். எங்களுக்கும், அவர்களுக்கும் கொள்கையில் உடன்பாடு குறைவு தான்.