டெல்லி : கோவையில் உள்ள ஈஷா மையம் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் தலைவர் ஆன்மீக குரு சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு தலையின் மூளைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இன்று (மார்ச்.27) அவர் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈஷா மையத்தின் தலைவர் சத்குருவுக்கு நீண்ட நாட்களாக தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு சுயநினைவை இழந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவரது இடது கால் உள்ளிட்ட உடல்பாகங்கள் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் தலையின் மூளை பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர். இதையடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். மருத்துவர்கள் வினித் சூரி, பிரணவ் குமார், சுதீர் தியாகி, மற்றும் எஸ் சட்டர்ஜி உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு ஆன்மீக குரு சத்குருவுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்தனர்.
இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின்னர் சத்குரு பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கினார். மேலும், அரை மயக்கத்துடன் சத்குரு தனது அறுவை சிகிச்சை குறித்து கேலியாக பேசிய வீடியோவும் வெளியானது. இதையடுத்து தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கும் முன் அவர் செய்தித்தாள் படிப்பது போன்ற புகைப்படம் வெளியானது.
இந்நிலையில், இன்று (மார்ச்.27) அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய அப்பல்லோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி, சத்குரு குணமடைந்து வருவதாகவும் அவரது மனப்பான்மை, உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, கூர்மையான சிந்தனை மற்றும் நகைச்சுவை உணர்வு என அனைத்தும் அப்படியே உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்குருவை பிரதமர் மோடி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட தொடர்பு கொண்டு உடல் நலன் குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :கேரளா முதலமைச்சரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு! என்ன காரணம்? - ED Case Against Kerala CM Daughter