திருச்சி:முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சுதந்திர ராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் அளித்த பின் அவர்களை அனுப்புவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தனுக்கு இரண்டு கால்கள் வீக்கம் ஏற்பட்டு அவதியுற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள உயர்தர சிறப்பு சிகிச்சை கட்டிடத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டு அவருடைய ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர் கோரிக்கை:கடந்த சில மாதங்களாக திருச்சி முகாமில் இருக்கும் சாந்தன். தன்னை சொந்த நாடான இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை துணை தூதர், வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.