சென்னை:தமிழ்நாடு முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 547 வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளும் அடங்கும். இந்த பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசிற்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க பல்வேறு வழிமுறைகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த பேருந்துகளை, தமிழக பதிவு எண்ணாக மாற்றுவதற்கான நடவடிக்கையை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே போக்குவரத்து துறை சார்பாக 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
அதனை முழுமையாக பின்பற்றாத சூழ்நிலையில் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க தடை என கடந்த ஜூன் 12ஆம் தேதி போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்து இருந்தது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், "வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட ஆமினி பேருந்துகள் இயங்கக்கூடாது. ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், கால அவகாசம் நீட்டிப்பது குறித்து போக்குவரத்து ஆணையரிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முறையீடு செய்தால், அவர் அது குறித்து முடிவு எடுப்பார்" என தெரிவித்து இருந்தார்.