சென்னை:சென்னையில் உள்ள மக்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துச் செல்வது வழக்கம். அப்போது, பயணிகளின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த நிலையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் செல்ல 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பான, ஆலோனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. அதில், போக்குவரத்துத்துறை, காவல்துறை, சிஎம்டிஏ உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
14 ஆயிரம் சிறப்பு பேருந்து:
அப்போது, ஜனவரி 10, 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களுக்கு 14 ஆயிரத்து 104 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் குறிப்பிட்ட இந்த நாட்களில், கூடுதலாக 5,736 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், அவை அனைத்தும் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளில் மொத்தமாக 7 லட்சத்து 75 ஆயிரத்து 720 பயணிகள் வரை சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், கடந்தாண்டு (2024) 6 லட்சத்து 54 ஆயிரத்து 472 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து வழித்தடம்:
- கோயம்பேட்டிலிருந்து இசிஆர் (ECR) மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கம்.
- மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளுடன்; திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் குறிப்பிட்ட சில பேருந்துகள் இயக்கப்படும்.
- மற்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. (அதாவது, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி மார்க்கம், மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், உள்ளிட்ட வழித்தட பேருந்துகள் கிளாம்பாகத்தில் இருந்து இயக்கப்படும்)
இதையும் படிங்க:பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.. அப்போ இத தெரிஞ்சுக்கோங்க - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
அதேபோல், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதியாக ஜனவரி 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 10,460 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 5,340 பேருந்துகளும் சேர்த்து 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக நாளொன்றுக்கு 2,092 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை செய்துள்ளார். மேலும், ஆம்னி பேருந்துகள் இயக்கம் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து ஒரிரு நாட்கள் தெரிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை டிஎன்எஸ்டிசி (TNSTC) இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் 1800 மற்ற்றும் 044- 26280455 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் எனவும், கிளாம்பாக்கம் செல்வதற்கு 300 மாநகப் பேருந்து இயக்கப்படும் எனவும், ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் சாலையில் நிறுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.