திருவாவடுதுறை ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய பரிகார ஸ்தலமாகப் போற்றப்படும் சூரியானார் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இத்திருக்கோயிலில், சூரியபகவான், உஷாதேவி, சாயாதேவி ஆகிய இரு மனைவியர்களுடன், திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எந்த எந்த திசை நோக்கி எப்படி அமைந்துள்ளதோ, அதே போலவே இத்திருக்கோயிலில் அனைத்து நவக்கிரகங்களும் தனித்தனி சன்னதி கொண்டு தங்களுக்குரிய ஆயுதமோ, வாகனமோ இன்றி சாந்த சொரூபமாக அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். அதுபோலவே, இவ்வாண்டும், நேற்று மாலை குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியானதை தொடர்ந்து, மூலவர் சிவசூரிய பெருமான், மூலவர் குரு பகவான் மற்றும் உற்சவர் குருபகவான் ஆகியோருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் உஷாதேவி மற்றும் சாயாதேவி சமேத சிவசூரியபெருமான் மற்றும் அவருக்கு நேர் எதிரே அமையப்பெற்ற குருபகவானுக்கும் வெள்ளி கவசங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்விக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோபுர ஆர்த்தி மற்றும் பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது.
மேலும் உற்சவர் குருபகவானுக்கும் அர்ச்சனைகள் செய்து, கோபுர ஆர்த்தி, மற்றும் பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம், ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கட்டளை தம்பிரான் சுவாமிகள் உட்பட ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
குரு பெயர்ச்சி நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது, "மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டு, மரங்கள் இல்லதா சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக வெப்பம் அதிமாகிவிட்டது.
மக்கள் அனைவரும் வெய்யில் தாக்கம் அதிகமாக உள்ளதால், மதிய நேரங்களில் வெளியே நடமாடாமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் வெளியே நடமாட வேண்டும்.
அதிகமான அளவு தண்ணீர் நீர் மோர் பருக வேண்டும். மேலும் நீர் சத்துள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் போன்றவற்றை உண்ண வேண்டும். வீடுகள் மற்றும் வீதிகள் தோறும் அதிக எண்ணிக்கையில் மரங்கள் நட்டு அதனை பேணி காத்து வளர்க்க வேண்டும், அப்போது தான் இந்த கடுமையான சூழல் மாறும்"என்று சுவாமிகள் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாரிஸ் ஒலிம்பிக் பாய்மரப் படகு போட்டியில் இருக்கும் சவால்கள் என்னென்ன? - நேத்ரா குமணன் பிரத்யேக பேட்டி!