தஞ்சாவூர்: மகாபிரளத்தின் போது அமிர்தகுடம் உடைந்த போது, வில்லம் விழுந்த இடத்தில், எழுந்தருளி ஸ்ரீ வில்வனேசர் எனும் திருநாமம் பெற்று, பின்னர் உலக பாரத்தை தாங்க சக்தியுற்ற நாகராஜன் ஸ்ரீ வில்வனேசரை பூஜித்து அனுக்கிரஹம் கிடைத்ததால் ஸ்ரீ நாகராஜன் வேண்டுகோளுக்கு இணங்க நாகேஸ்வரர் என திருநாமம் பெற்றார்.
நாகேஸ்வர சுவாமி கோயிலில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் (Credits - ETV Bharat Tamil Nadu) தாயார் பிரஹன்நாயகி, சூரியன் தனது கிரஹணம் மழுங்கி கலங்கி நின்றபோது அசரீரியின்படி, சூரிய தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ நாகேஸ்வர சுவாமியை வழிபட்டு பேறு பெற்றார். இதனை நினைவு கூறும்வகையில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்களிலும் தனது சூரிய கதர்களால் நாகேஸ்வரரை வழிபடுவதை இன்றும் காணலாம்.
ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதி வடிவமான சிவபெருமான் திருவடிவம் மிகவும் சிறப்புற்குரியது. அதாவது, பிரபஞ்ச இயக்கலை நடன கோலத்தின் வழியாக வெளிப்படுத்தும் அற்புத கோலம் நடராஜ பெருமான் திருக்கோலம். இவருக்கு, ஆண்டிற்கு ஆறு முறை மட்டும் சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்படும்.
மூன்று முறை நடசத்திரத்தின் அடிப்படையிலும், மூன்று முறை திதியின் அடிப்படையிலும் இந்த அபிஷேகம் நடைபெறும். அதாவது, சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்திலும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்திலும், ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களில் சதுர்த்தசியிலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்திலும், நிறைவாக மாசி மாதத்தில் சதுர்த்தசியிலும் அபிஷேகம் நடைபெறும்.
இந்நிலையில், அத்தகைய நடராஜ பெருமான் அபிஷேகம் காணும் ஆறு முக்கிய தினங்களில் ஒன்றான ஆனி மாத உத்திர நட்சத்திர தினத்தை முன்னிட்டு நேற்று முற்பகல் கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வர சுவாமி கோயிலில், எண்ணெய் காப்பு சாற்றி, திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள்பொடி, தேன், பஞ்சாமிர்தம், இளநீர், நார்த்தை, பால், தயிர், விபூதி, சந்தனம் முதலிய விசேஷமான நறுமண பெருட்களை கொண்டு ஸ்ரீ சிவகாமி அம்பிகா சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா; மஞ்சள் அலங்காரத்தில் வாராஹி அம்மன்! - Ashadha Navratri Festival