கோயம்புத்தூர்:கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் உதயகுமார் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 8 தனிப்படை போலீசார் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தியதில், 12 மணி நேரத்தில் 4 பேரை கைது செய்துள்ளோம்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் நான்கு பேரும் கோவையைச் சேர்ந்தவர்கள். இதில் அய்யனார் என்ற செல்வம், உதயகுமாருக்கு கடந்த பிப்ரவரியில் கடனாக ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். 6 மாதங்கள் கடந்த நிலையில், உதயகுமார் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்தும் நீங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று அய்யனார் என்ற செல்வம் மற்றும் கௌதம் ஆகியோர் வழக்கறிஞர் உதயகுமாருடன் காரில் சென்றுள்ளனர். அப்போது, அய்யனார் உதயகுமாருக்கு கடனாக கொடுத்த ரூ.30 லட்சம் பணத்தை அய்யனாரிடம் திருப்பிக் கேட்டுள்ளார். அதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.