திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லேசான காயங்களுடன் 6 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சைக்காக அனுமதித்து தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயிலில் பயணம் செய்த 1500க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு சிறப்பு ரயில் மூலம் பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து தர்பாங்காவிற்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து ஏற்பட்ட கவரைப்பேட்டை ரயில் நிலையம் பகுதியில் தடம் புரண்ட பெட்டிகளில் 9 பெட்டிகள் ராட்சத க்ரைன் உதவியுடன் அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள 13 பெட்டிகளை அகற்றும் பணியில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ரயில் விபத்து என்ன காரணத்தினால் ஏற்பட்டது? சிக்னல் கோளாறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் ரயில்வே துறையினரும், தமிழ்நாடு காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் 125 A, 125 B, 154 & 281 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க :Bagmathi Express Accident: நேரில் சென்ற அமைச்சர்கள்: மருத்துவமனை சென்ற உதயநிதி- தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை
கவரைப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனிபிரசாத்பாபு, லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன், கவரைப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி, இரண்டு சிக்னல் ஆப்ரேட்டர்கள் உள்ளிட்ட 13 பேர் விசாரணைக்கு ஆஜராகும்படி தெற்கு ரயில்வே சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரயில் பெட்டிகள் அகற்றும் பணி மற்றும் இருப்பு பாதையை சீரமைக்கும் பணி நாளை (அக் 13) காலை வரை நடைபெறும் என தகவல் வெளியான நிலையில், கவரைப்பேட்டை மெயின் லைனில் சென்னை சென்ட்ரலில் இருந்து நிஜாமுதீன் வரை இயக்கப்படும் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலானது(12434) கவரைப்பேட்டை மார்க்கமாக 9.05 மணி அளவில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்