திருநெல்வேலி:வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில், வண்டுகள் இறந்து கிடந்தது தொடர்பான வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உணவு விநியோகம் செய்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் தென்னக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக செயல்பட்டு வருகிறது. நெல்லையிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்குச் சென்னை எழும்பூர் சென்றடையும் இந்த ரயில், மறு மார்க்கமாக எழும்பூரிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.
இதையும் படிங்க:வந்தே பாரத் ரயில் உணவு குறித்து நடிகர் பார்த்திபன் புகார்... ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை!
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 16) காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில், பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில், வண்டுகள் செத்துக் கிடந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணி, ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அதற்கு ரயில்வே ஊழியர்கள் முறையாக விளக்கமளிக்கவில்லை எனக் கூறி, வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலானதை அடுத்து, தென்னக ரயில்வே விளக்கமளித்துள்ளது.