தூத்துக்குடி: சுதந்திர தினத்தில் இருந்து பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள செய்தி, நெல்லை தூத்துக்குடி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, காலை 7.35 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பும் இந்த பயணிகள் ரயிலானது தாழையுத்து, கங்கைகொண்டான், நாரைக்கிணறு, வாஞ்சி மணியாச்சி, கைலாசபுரம் தட்டப்பாறை வழியாக காலை 9.20 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
பாசஞ்சர் ரயில் ரத்து: தினசரி இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் சேவையானது நெல்லை மற்றும் தூத்துக்குடி ஏழை எளிய மக்கள், மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. தற்போது இந்த ரயில் சேவையை நாளை (ஆக.19) முதல் ரத்து செய்யப்போவதாக தென்னக ரயில்வே தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி செல்லும் வண்டி எண் 06668 மற்றும் 06667 பயணிகள் ரயிலுக்கு போதிய ஆதரவு இல்லாத காரணத்தால், நாளை முதல் (ஆக.19) ரத்து செய்யப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவு ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், திடீரென ஒரு ரயில் சேவையை நிறுத்துவதால் அதனை நம்பியுள்ள மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.