மதுரை: திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் திருவண்ணாமலை வழியாக மேற்கு வங்கம் மாநிலம் புருளியாவுக்கு, வாரம் இருமுறை ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில், இந்த ரயில் சேவையானது ஏப்ரல் 13ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் திருவண்ணாமலைக்கு நேரடியாக செல்ல இயலாமல் தவித்து வந்த நிலையில், தற்போது திருநெல்வேலியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் புருளியா வரை, வாரம் இருமுறை இயக்கப்பட உள்ள இந்த ரயில், அண்ணாமலையார் பக்தர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
புருளியா - விழுப்புரம் (22605) மற்றும் விழுப்புரம் - புருளியா (22606) ஆகிய ரயில்கள், கரக்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, கூடூர், ரேனிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் வரை இயக்கப்படுகின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் என அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து (ABGP) என்ற அமைப்பின் மூலம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, தெற்கு ரயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவ்வமைப்பு வலியுறுத்தியதன் காரணமாக சென்னையில் இருந்து வேலூர் வரை செல்லக்கூடிய ஒரு ரயிலை, பௌர்ணமியன்று மட்டும் கூடுதலாக திருவண்ணாமலை வரை நீட்டித்து அனுமதி அளித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது புருளியா - விழுப்புரம் மற்றும் விழுப்புரம் - புருளியா செல்லக்கூடிய ரயில்களின் கால அட்டவணையில் சிறிது மாற்றம் செய்து, சென்னை அருகே பெரம்பூர், காட்பாடி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருநெல்வேலி வரை இந்த ரயில்களின் தூரத்தை தெற்கு ரயில்வே வரும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் விரிவுபடுத்த உள்ளது.
இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு, மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் வரை விசாகப்பட்டினம், புவனேஸ்வர் வழியாக செல்வதற்கு கூடுதல் ரயில் சேவையாக இது அமைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் செல்வதற்கு ஹௌரா - கன்னியாகுமரி வாராந்திர ரயில் சேவை மட்டுமே தற்போது வரை உள்ள நிலையில், தொடங்கப்பட உள்ள இந்த ரயில் சேவை கரக்பூர் வரை சென்றாலும், அங்கிருந்து கொல்கத்தா 115 கி.மீ தொலைவுதான்.