சென்னை:பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு தங்களது கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்பாடி பகுதியைச் சேர்ந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த போலீசாரின் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றிரவு (ஜூலை 5) சென்னை பெரம்பூர் சடையப்பன் தெருவில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் அருகே வைத்து அவரை உணவு டெலிவரிமேன் போல் உடையணிந்து வந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
திட்டமிட்டு கொலை?பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங், அரசியலிலும், பொது சேவையிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், பல பகுதிகளில் இவருக்கு பல்வேறு எதிரிகளும் உண்டு என்றும் இதனாலே அவர், எப்போது வெளியில் சென்றாலும் கைத் துப்பாக்கி ஒன்றை கொண்டு செல்வது வழக்கம். இதற்கான உரிமம் அவர் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.