திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவை சார்ந்த சரவணன் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி பதவி ஏற்றார். இவர் பதவியேற்று ஒரு சில கூட்டங்களுக்குப் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த உறுப்பினர்களுக்கும் அவருக்கும் நேரடியாகவே மாமன்ற கூட்டத்தில் மோதல் நடந்து வந்தது.
மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு 35க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினர். இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி மேயர் சரவணன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார்.
கட்சித் தலைமையின் அறிவுரையின்படி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் உள்ளிட்டோர், மாமன்ற உறுப்பினர்களை கன்னியாகுமரி மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றதாக அப்போது பேசப்பட்டது. இந்நிலையில் உறுப்பினர்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு நடந்த இரண்டு கூட்டங்களிலும் தொடர்ந்து மோதல் போக்கே நீடித்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாநகராட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் 10 உறுப்பினர்கள் மட்டுமே மொத்தமாக கூட்டத்திற்கு வந்திருந்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால், தேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து மேயர் சரவணன் மாமன்ற கூட்ட அவை விட்டு வெளியேறினார்.
சென்னைக்கு அவசர அழைப்பு:இந்நிலையில் திமுக தலைமை திடீரென நேற்று திருநெல்வேலி மேயர் சரவணனை சென்னைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவை சந்திக்க வலியுறுத்தபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீண்ட பேச்சுவார்க்கைக்கு பிறகு அவரிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தலைமையின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.