சென்னை: அதிமுக ஆட்சி காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதியில் மின்சார வாரியத்தில் 6,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைக்கேடு நடந்ததாகவும், அதில் அதானி நிறுவனம் மட்டுமே ரூபாய் 3000 கோடி முறைகேடு செய்ததாகவும் அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்பு துறையில் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் கொடுத்தது.
அந்த புகாரில் '' கடந்த 2014ல், இந்தோனேஷியாவில் இருந்து, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கப்பல் வாயிலாக நிலக்கரி வந்தது. ஒரு கிலோவுக்கு 6,000 கலோரி வெப்பத்தை வெளிப்படுத்தும் உயர் ரக நிலக்கரிக்கு மின் வாரியம் ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால், சப்ளை செய்த நிலக்கரி, 3,500 கலோரிகள் மட்டுமே வெப்பம் தரும் தரம் குறைந்த ரகமாக இருந்தது'' என கூறப்பட்டிருந்தது.
மேலும், இந்தோனேஷிய நிறுவனத்திடம் மலிவான விலைக்கு நிலக்கரியை வாங்கிய அதானி குழுமம், அதை உயர்ந்த தரம் எனக்கூறி மும்மடங்கு அதிகமான விலைக்கு மின்வாரியத்துக்கு விற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. அதோடு, பல நாடுகளின் வழியாக அது வந்து சேர்ந்ததாக கணக்குகாட்டி, அதிகமான போக்குவரத்து கட்டணமும் வசூலித்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தது.
அதே ஆண்டில், இதுபோல 24 கப்பல்களில், தரம் குறைவான நிலக்கரி வந்துள்ளது என்றும் தரம் குறைவான நிலக்கரியை உயர் தர நிலக்கரி என சான்றளிக்க, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.