சென்னை: சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 16 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும், வெவ்வேறு ரவுடிகளும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது. இதனிடையே, போலீஸ் காவில் எடுக்கப்பட்டிருந்த திருவேங்கடம், தடயங்கள் சேகரிப்பின் போது தப்பிக்க முயன்றதாகக் கூறி போலீசார் அவரை என்கவுண்டர் செய்தனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சமீபத்தில் கைதான ஹரிகரன், அருள், பொன்னை பாலு, வினோத் ஆகியோரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நேற்று அவர்களை போலீசார் தடயங்கள் சேகரிக்க அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் காதலி அஞ்சலை கொடுத்த தகவலின் அடிப்படையில், சீசிங் ராஜா என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சீசிங் ராஜா ஆந்திர மாநிலத்தில் உள்ள அவரது இரண்டாவது மனைவி வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.