திருச்சி: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி மாவட்டம், வட்டம், ஊராட்சி, நகராட்சி ஆகிய அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். மேலும், அவரது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக திருச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடங்களை மாநாடு நடத்துவதற்கான இடம் குறித்து புஸ்ஸி ஆனந்த ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருச்சி பொன்மலை பகுதியில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான ஜி கார்னர் மைதானத்தில், தமிழ வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 1ஆம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகனிடம், ஜி கார்னர் மைதானத்தில் தங்கள் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்காக 60 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், அதற்கான வைப்புத் தொகை மற்றும் வாடகை தொகையை கட்சியின் சார்பாக செலுத்துவதாக கூறி மனு ஒன்றை அளித்ததாகவும் கூறப்படுகிறது.