அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஆசி பெற்ற திண்டுக்கல் சீனிவாசனின் மகன் திண்டுக்கல்:திண்டுக்கல்லில் புகழ்பெற்ற 333 ஆண்டுகள் பழமையான 'பாஸ்கு திருவிழா' நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி விழாவானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்த தேர் பவனி விழாவில் பங்கேற்க ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் ஆலயத்தில் காத்திருந்தனர். அப்போது இவ்விழாவில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் மற்றும் திண்டுக்கல் சீனிவாசனின் மகன்களான ராஜமோகன் மற்றும் இளைய மகன் சதீஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் எனப் பலரும் (AIADMK and DMK Executive Meet) பங்கேற்றிருந்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் அமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர் உட்பட கட்சி பாகுபாடின்றி ஒருவருக்கொருவர் மரியாதை நிமித்தமாக கைக்கொடுத்து நலம் விசாரித்துக் கொண்டனர். பின்பு இருக்கையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் சீ.சீனிவாசன் தனது இளைய மகன் சதீஷை அழைத்து ஜ.பெரியசாமி அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
பின்பு தனது மகன் சதீஷை அமைச்சர் பெரியசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள் எனக் கூற சதீஷ், அமைச்சர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். பின்பு அங்கே அமர்ந்திருந்தர்கள். நிர்வாகிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாகப் பேசிக் கொண்டு இருந்தபொழுது திடீரென்று திண்டுக்கல் சீனிவாசன், "பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் எங்கே? ஏன்? அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டு கட்சி நிர்வாகிகளும் இணைந்து தேர் பவனியை தொடங்கிவைத்த நிலையில், வெகு விமர்சையாக தேர் பவனி நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் வேளையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற பாஸ்கு தேர் பவனி விழாவில், கட்சி பாகுபாடின்றி அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது விழாவிற்கு வந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
'பாஸ்கா' திருவிழா என்பது இயேசுபிரான் மரித்து உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தும் விழாவாகும். உயிர்த்தெழுந்த இயேசு இந்நாளில் மக்களுக்கு புதுப்பொழிவுடன் காட்சியளித்தார் என கிறிஸ்தவர்களால் நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குறி வச்சாச்சு.. ரஜினியின் 'வேட்டையன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!