பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டம், முத்து நகர் விரிவாக்கப் பகுதியான கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் ஸ்ரீராம்குமார் (34). காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூரில் தனது 70 வயது தாயாருடன் வசித்து வந்ததாகவும், தற்பொழுது இருக்கும் வீட்டில் கடந்த ஓர் ஆண்டாக வாடகைக்கு குடியிருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரது தாயார் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருந்ததாகவும், புகைப்படக் கலைஞரான இவர் நாள்தோறும் திருச்சிக்கு வேலைக்குச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது தாயார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார். அப்போது உயிரிழந்த தாயாரின் உடலை தான் வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டின் நடுவில் கிடத்திய ஸ்ரீராம்குமார், சடங்கு சம்பிரதாயங்கள் செய்து அவர் மேல் துணியைப் போர்த்தி பூஜை பொருட்கள், தர்ப்பை போன்றவற்றை வைத்து வணங்கி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டின் அனைத்து பகுதிகளையும் உட்புறமாக பூட்டிய ஸ்ரீராம்குமார், வீட்டின் அறையில் தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் அதிக அளவில் பழகாத இவர்கள், கடந்த 10 தினங்களாக வெளியில் நடமாடவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று வீட்டின் உள்ளே இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வருவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் பெரம்பலூர் நகர போலீசார் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஸ்ரீராம் குமாரும், அவரது தாயார் உடலும் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.