திருவள்ளூர்:தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று திருவள்ளூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு மத்தியில் தன் கால்களுக்கு பொருத்தமான ஷூவை அணிந்து கொண்டு மோப்ப நாய் ஜான்சி சோதனையில் ஈடுபட்டது காண்போரை கவரும் வகையில் இருந்தது.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (மே 7) நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் வெடிகுண்டுகளை பரிசோதனை செய்யும் மோப்ப நாய்களும், காலவர்களுடன் இணைந்து இந்த ஆய்வின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையில், இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மோப்ப நாய் ஜான்சி, சிவப்பு நிற ஷூ அணிந்தபடி வேகமாக வீரநடை போட்டு சோதனையில் ஈடுபட்டு வந்தது.