விழுப்புரம்:தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்.27) விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் மாநாட்டிற்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக மாநாட்டு திடலில் உணவு வழங்கப்படும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென விஜய்யின் அறிவுறுத்தலின்படி மாநாட்டு திடலில் உணவு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. காரணம் மதுரை அருகே நடைபெற்ற அதிமுகவின் மாநாட்டின் போது டன் கணக்கில் உணவுகள் வீணானது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதே போல் உணவு போன்ற எந்த ஒரு விஷயத்திலும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக விஜய் கவனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதனால் விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் உணவு ஆர்டர்கள் குவிந்துள்ளன.