சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வருகைப் பகுதியில் உள்ள கழிவறையை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது, கழிவறையிலிருந்த குப்பைத்தொட்டி ஒன்றில் பார்சல் கிடந்ததைப் பார்த்து, விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மேலாளர், மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின், அவர்கள் வந்து பார்சலை எடுத்துள்ளனர். அதில், வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில், வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரிய வந்ததையடுத்து பார்சலை பிரித்துப் பார்த்துள்ளனர். அப்போது, அதனுள் 4 தங்கக் கட்டிகள் இருந்ததை மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர், அந்த தங்கக் கட்டிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சுங்க அதிகாரிகள் தங்கக் கட்டிகளை ஆய்வு செய்து பார்த்த போது, அதன் மொத்த எடை 1 கிலோ 250 கிராம் இருந்தது எனவும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.90 லட்சம் எனத் தெரிவித்துள்ளனர்.