சென்னை: வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து சென்னை ஓட்டேரியில் உள்ள நம்மாழ்வார் பேட்டை அருகே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய ஸ்மிருதி ராணி, "கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும் மோடி தான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என்று எங்களால் சொல்ல முடியும். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ளவர்களால் யார் பிரதமர் வேட்பாளர் என சொல்ல முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
இந்தியா கூட்டணியில் உள்ளவர்களால் யார் பிரதமர் வேட்பாளர் என சொல்ல முடியுமா மேலும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்பது தான் எங்களது கோட்பாடு, ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு இந்தியாவை வலுப்படுத்துவதற்கான கோட்பாடுகள் எதுவும் கிடையாது. தலைவர் இல்லாத கூட்டணியாக இந்தியா கூட்டணி உள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறோம் என சொல்லும் காங்கிரஸ் கட்சியினர் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் மூலம் எப்படி ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
கேரளாவில், பி.எப்.ஐ தீவிரவாத அமைப்பின் துணை கொண்டு தேர்தலைச் சந்திக்கும் காங்கிரஸால் எப்படி ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி நிதியைத் தமிழகத்திற்கு அளித்துள்ளது. இதுபோல காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது எனச் சொல்ல முடியுமா என்றார்.
குடும்ப ஆட்சியை அகற்ற பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கூறி வாக்குகளைச் சேகரித்தார். நீங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தைக் காண வேண்டுமென்று நினைத்தால் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பம் வளர்ச்சியடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் பின்புலம் உள்ள குடும்பம் மட்டும் வளர்ச்சியடைய வேண்டும் என நினைக்கிறீர்களா என்பதை மனதில் வைத்துக் கொண்டு வாக்களியுங்கள்" என கூறி வாக்குகளைச் சேகரித்தார். பிரச்சாரத்தின் போது பாஜக மீனவர் அணி சார்பாக ஸ்மிருதி இராணிக்குப் பாறை மீன் பரிசாக அளிக்கப்பட்டது.
இததையும் படிங்க: ராமநவமி யாத்திரை: என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்? என காவல்துறை பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - Rama Navami Yatra Case