ஈரோடு: ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை வழக்கமாக வியாழக்கிழமை நடைபெறும். இங்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் மற்றும் விளைநிலங்களில் நடவு செய்யப்படும் விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், இன்று புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தைக்கு 1,000க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரங்களில் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால், விவசாய நிலங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
விதை வெங்காயத்துக்கு மவுசு:இதன் காரணமாக, சின்ன வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் இன்று சந்தைக்கு வந்திருந்து, நடவு செய்ய அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்கிச் சென்றனர்.
60 ரூபாய் வரை விற்பனை:கடந்த சில வாரங்களாக கிலோ 35 ரூபாய்க்கு விற்ற விதை வெங்காயம், இன்று விலை உயர்ந்து கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது. விதை வெங்காய விலை உயர்ந்தாலும், விவசாயிகள் அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்கிச் சென்றனர். இவ்வாறு விதை வெங்காய விலை உயர்ந்தாலும், பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் விளை நிலங்களில் பயிரிட அதிகளவில் விதை வெங்காயத்தை வாங்கிச் சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில வருடங்களாக சின்ன வெங்காயம் விலை கிலோ 120 ரூபாய் வரை விற்கப்பட்டது. தொடர்மழை, வெயில் காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், விலை ஏற்றமாக இருந்தது. தற்போது கர்நாடகத்திலும் மழை இல்லாததால், சின்ன வெங்காயம் விளைச்சல் குறைவாக இருப்பதால், தற்போது இரு மாநில எல்லையான தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடிக்கு தயாராகி வருவதால் விதை வெங்காயம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி வன பாதுகாப்பு செயலாளர் உயிரிழப்பு - ரூ.50,000 நிதியுதவி! - Valparai Elephant Attack