தஞ்சாவூர்:தமிழ்நாட்டில் முதன்முதலில் குடிசை மாற்று வாரிய ஐடியாவை அறிமுகப்படுத்தியது அப்போதைய மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா தான். இயற்கை பேரிடரால் மக்கள் தங்களது வீடுகள், உடைமைகள் என அனைத்தையும் இழந்து தவித்ததைப் பார்த்த அண்ணா அனைவருக்கும் வீடு கொடுக்க வேண்டுமென எண்ணி திட்டமிட்டு ஒவ்வொரு மழை - புயல் காலங்களில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தார்.
பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதனை 'குடிசை மாற்று வாரியம்' திட்டமாக விரிவுபடுத்தினார். இந்த திட்டம் முதன்முதலில் வடசென்னை பகுதியில் செயல்பட தொடங்கியது. அதன்பின் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது.
தஞ்சை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பிரச்சனை (Credit-ETV Bharat Tamil Nadu) அந்த விரிவாக்கத்தில் தான், கடந்த 1987ம் ஆண்டு கும்பகோணம் மாநகரின் மைய பகுதியாக விளங்கும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே, நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதி, சாரங்கபாணி கீழ வீதி சந்திப்பில் குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மாநகர பகுதியில் தூய்மை பணியாளர்களாக வேலை செய்வோரின் 112 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :ஹாரிஸ் ஜெயராஜ் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்..அப்படி என்ன வழக்கு..?
குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு :கடந்த 40 ஆண்டுகாலமாக இந்த அடுக்குமாடி குடியிருப்பை பராமரிக்கவில்லை எனவும், இக்குடியிருப்பில் பல இடங்களில் சிமெண்ட காரைகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், சிமெண்ட் காரைகள் பெயர்ந்து அவ்வப்போது விழுவதால் பலருக்கு காயம் ஏற்படுவதாகவும் குடியிருப்பு வாசிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும், இங்கு எப்போதும் அசுத்தமாகவும், குப்பைகள் நிறைந்தும், கழிவுநீர் பிளாஸ்டிக் பைப்புகள் ஆங்காங்கே உடைந்து தொங்கியபடி இருக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சீதா கூறுகையில், "நாங்கள் கடந்த 40 ஆண்டு காலமாக இங்கே இருக்கிறோம். இங்கு 112 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எல்லாருமே கூலி வேலைக்கு செல்பவர்கள் தான். வெளியே வாடகைக்கு வீடு தேடி சென்றால் ரூ.7000, ரூ.8000 என்று சொல்கிறார்கள். இந்த வாடகை எங்களால் கொடுக்க முடியாது. நாங்கள் வாங்குகின்ற சம்பளம் ரூ.10,000 தான்.
மேலும், இந்த இடத்தை காலி செய்யுங்கள் என அதிகாரிகள் சொல்கிறார்கள். இதற்கு பணம் நாங்கள் தருகிறோம் என கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் கேட்கின்ற ஆதாரம் எதுவும் கொடுக்க மறுக்கின்றனர், மாற்று இடம் கேட்டால் அதையும் கொடுக்க மறுக்கின்றனர்" என தெரிவித்தார்.
இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மகேஸ்வரி கூறுகையில், "இந்த இடத்தை எங்களுக்கு தருவார்கள் என எண்ணி, நாங்கள் இங்கே இருக்கிறோம். இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் சரியில்லை என்று சில வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகள் சிதிலமடைந்து இருக்கிறது. சிதிலமடைந்த வீடுகள் எப்போது விழும் என்ற பயத்தில் நாங்கள் வசித்து வருகிறோம்" என தெரிவித்தார்.
இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரேவதி கூறுகையில், ”இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான். நாங்கள் 5 தலைமுறையாக இங்கு இருக்கிறோம். இங்கே இருக்கின்ற வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து விழும்போது எங்களுக்கு மிக மன கஷ்டமாக இருக்கிறது.
ஒவ்வொரு அதிகாரியும் வந்து பார்த்துவிட்டு தான் செல்கிறார்களே தவிர, அதற்கான நடவடிக்கையை எடுக்க மாட்டிக்கிறார்கள். இந்த கட்டடத்தை பராமரிக்க வேண்டும். இந்த கட்டடம் என்றைக்கு விழும் என்ற பயத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். ஆதலால் இதை பராமரிக்க வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்