தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TNPSC Group 2 Answer Key எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்! - TNPSC Group 2 Answer Key

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான விடைக்குறிப்பு இன்னும் ஆறு வேலை நாட்களில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர்
டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 7:00 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான போட்டித் தேர்வு இன்று (செப்டம்பர் 14) தமிழகம் முழுவதும் காலை 9.30 மணி முதல் தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்றது.

2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப்-2 தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் 251 தேர்வு மையங்களில் 75 ஆயிரத்து 185 பேர் குரூப்-2 தேர்வை எழுதுகின்றனர். இந்த நிலையில், எழும்பூர் பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மையத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து எஸ்.கே.பிரபாகர் பேசியதாவது, “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 முதல்நிலைத் தேர்வு சுமூகமாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் 10 தேர்வுகளை நடத்த அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. 8 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க:20வது முறை TNPSC attempt.. திருச்சியில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய தந்தை - மகள்!

வேலை வாய்ப்பு: இந்த ஆண்டுக்குள் திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளையும் நடத்த வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 10 ஆயிரத்து 315 பேருக்கு டிஎன்பிஎஸ்சி வாயிலாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பத்தாயிரம் பேருக்கு வரை வேலை வாய்ப்பு கிடைக்க தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுக்கான விடைக்குறிப்பு இன்னும் ஆறு வேலை நாட்களில் போடப்படும். அதில் ஏதாவது குழப்பங்கள் இருந்தால் மாணவர்கள் பதிவு செய்யலாம்.

விடைத்தாள் திருத்தும் பணி: தேர்வுத் தாள்கள் திருத்தும் பணிகள் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை நடக்கும். தேர்வு நடைமுறைகள் முழுவதையும் வீடியோ எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிடவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். விடைத்தாள்களை திருத்த கூடுதல் பயிற்சி பெற்ற நிபுணர்கள், கூடுதல் ஸ்கேனர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

தேர்வு மைய வசதிகள்:தேர்வு எழுதும் அனைத்து மையங்களிலும் மருத்துவ உதவிகள், மின்சார வசதி ஏற்பாடுகள், பேருந்து வசதி என அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலிருந்து ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்தத் தேர்வுகளைக் கண்காணிக்க துணை ஆட்சியர் அளவில் பறக்கும் படை செயல்பட்டு வருகிறது.

இணைத்தன்மை சான்றிதழ்: டிஎன்பிஎஸ்சி மூலம் வழங்கப்படும் பணிகளுக்கு, சில படிப்புகளில் இணைத்தன்மை என்ற சான்றிதழ் வாங்க வேண்டும். அதற்கு உயர்கல்வித் துறையின் குழு உள்ளது. விரைவாக அந்த சான்றிதழ்களை பெற்றுவிட்டால் அந்த மாணவர்களும் அடுத்தகட்ட தேர்வுக்கு தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். இணைத்தன்மை வழங்கும் குழுவிடம் விரைந்து இணைத்தன்மை சான்றிதழை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

குரூப் 4 தேர்வு முடிவுகள்:கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குரூப் 4 முடிவுகள் வெளியிடப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details