சென்னை: தமிழ்நாட்டில் பழங்கால சாமி சிலைகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு மற்றும் தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், திருச்சி சரக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த ஜூலை 6ஆம் தேதி தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தஞ்சை பெரியார் சமத்துவபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றை சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் கோணி சாக்கு முட்டையில் திரிபுராந்தகர், வீணா தக்ஷிணாமூர்த்தி, ரிஷபதேவர், மூன்று அம்மன் தேவி சிலைகள் ஆகிய ஆறு தொன்மை வாய்ந்த சாமி சிலைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். பின்பு அதனை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக காரில் இருந்த மூன்று நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (42), திருமுருகன் (39) மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் கொருக்கை பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (64) என்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீடு கட்டுமானத்தின் போது தோண்டிய குழியில் இருந்து ஆறு சிலைகள் கிடைத்ததும், இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் வேண்டுமென்று மறைத்து வைத்து அதனை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.