சென்னை: சென்னை, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சதாசிவம் (31) என்பவரின் வீட்டின் அருகில் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் கணேசன் (24), ஆனந்தராஜ் மகன் கார்த்திகேயன் (19) மற்றும் வினோத்(22) ஆகிய மூன்று பேரும் சத்தமிட்டு பேசிக் கொண்டிருந்த போது, சதாசிவம் மேற்கண்ட நபர்களிடம் வீட்டின் அருகில் நின்று கொண்டு சத்தமாக நீங்க பேச வேண்டாம் உடனடியாக இங்கிருந்து கிளம்புமாறு கூறி உள்ளார்.
இதனால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட மூன்று பேரும், சதாசிவத்தை கத்தியை காட்டி மிரட்டி விட்டு இருசக்கர வாகனம் மூலம் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சதாசிவம் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சதாசிவம் சகோதரர் செல்வம் (40), பாலகிருஷ்ணன் மகன் வேலு (36), ஆறுமுகம் மகன் பாலகிருஷ்ணன் (65), சவரன் ராஜ் மகன் பிரிட்டோ (எ) பீட்டர் (44), பலராமன் மகன் அன்பழகன் (37) மற்றும் சதாசிவம் ஆகிய ஆறு நபர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற மூன்று நபர்களை மடக்கிப் பிடித்தனர்.
இந்நிலையில் இரு தரப்பினருக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட அது தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், எதிர் தரப்பில், திருவேற்காடு பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சதாசிவம் தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டன.