ஈரோடு: ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மர்மநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாட்களில் 3 பெண்கள் உட்பட கெளரி(65), மாதி(75), மாரன்(60),ரங்கன்(80). கேலன்(50) மற்றும் மாரே(47) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் 6 பேரின் உயிரிழப்புக்கு தீவிர வயிற்றுப்போக்கு வாந்தி தான் காரணம் என கூறப்படுகிறது.
இதனிடையே சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 4 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மலைக் கிராமங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். மேலும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமையிலான மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து அங்குள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மக்கள் குடிநீராக பயன்படுத்தும் மேல்நிலைத்தொட்டி குடிநீர், கிணற்று நீர், குட்டை நீர் ஆகிய இடங்களில் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகு இறப்புக்கான காரணம் தெரிய வரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.