பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூர் என்ற இடத்தில் இன்று (ஆகஸ்ட் 8) காலை 8 மணி அளவில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை மறித்தது. சுதாரித்துக்கொண்ட அந்த இளைஞர் திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி ஓடினார். அவரை பின்தொடர்ந்த கும்பல் அந்த இளைஞரை படுபயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.
இதில் தலை, கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் அதிக வெட்டு விழுந்து முகம் கொடூரமாக வெட்டிச் சிதைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜி குமார், காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
குழு தொடங்கி நிகழ்த்தப்பட்ட கொலைகள்: காவல்துறை விசாரணையில் இக்கொலை சம்பவம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அக்னி ராஜ். சட்டக்கல்லூரி மாணவரான அக்னிராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அக்னி ராஜை 2021 ஆம் ஆண்டு மார்ச் 5ம் தேதி மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்தனர்.
முகத்தை சிதைத்து பழிக்கு பழி: இதற்கு பழிவாங்க வேண்டும் என அக்னி ராஜின் நண்பர்கள் 'அக்னி பிரதர்ஸ்' என்று ஒரு குழுவை தொடங்கி அக்னி ராஜ் வழக்கில் தொடர்புடைய பரமசிவம், ஆகாஷ், அழகு பாண்டி என்ற மூவரை அடுத்தடுத்து தலையை சிதைத்து வெட்டிக் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.