சென்னை: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாசுகி என்பவர் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 10 மணி அளவில், சைதாப்பேட்டையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு வந்துவிட்டு, மீண்டும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து கடலூர் செல்வதற்காக தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில் பெண்கள் பெட்டியில் ஏறி உள்ளார்.
அப்போது வாசுகி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் செயின் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த வாசுகி, இது குறித்து மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது, ரயில் நிலையத்தில் இரண்டு பெண்கள் வாசுகி கழுத்தில் அணிந்திருந்த செயினை நைசாக திருடிச் சென்றது தெரியவந்தது.
பின்னர், அவர்கள் குறித்து விசாரணை நடத்திய போது, ஓசூரைச் சேர்ந்த முத்து என்ற ரேகா (33), பேச்சி என்ற கண்மணி (36) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் சகோதரிகள் என்பதும், இதே போன்று பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.