தேனி:இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜனவரி 25ஆம் தேதி இலங்கையில் பவதாரிணி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அப்போது நடிகர்கள்,கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, இயக்குநர் மணிரத்தினம் உட்பட பல்வேறு திரை பிரபலங்களும் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்கள். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்படப் பல அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் பவதாரிணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்கள்.
இதனையடுத்து, இன்று (ஜன.27) தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்வதற்காக பவதாரிணி உடல் தேனிக்கு இன்று (ஜன.27) கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து இளையராஜாவின் பண்ணை வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக பவதாரிணியின் உடல் வைக்கப்பட்டது.
இங்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் குடும்பத்தினர் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் பவதாரிணிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.