கள்ளக்குறிச்சி:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 01.03.2024 முதல் 22.03.2024 வரை நடைபெற்ற நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 6) வெளியாகின. இதில், மொத்தமாக 7,60,606 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். இதில் 4,08,440 பேர் மாணவியர்கள், 3,52,165 பேர் மாணவர்கள், ஒருவர் மட்டும் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்.
இந்த சூழலில், நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா நேற்று வெளியிட்டார். இதில், மாநிலம் முழுவதும் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன்படி, மாணவிகள் 3,93,890 பேர் என 96.44 சதவீதமும் மற்றும் மாணவர்கள் 3,25,305 பேர் என 92.37 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதுமட்டும் அல்லாது பொதுத்தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். இம்முடிவுகளின் படி, மாணவர்களை விட 4.07 சதவீதம் மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8,243 மாணவர்கள் மற்றும் 8,955 மாணவிகள் என மொத்தம் 17,198 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 7,478 பேர் என 90.72 சதவிகிதமும், மாணவிகள் 8,500 பேர் என 94.92 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 765 மாணவர்கள், 455 மாணவிகள் என மொத்தம் 1,220 போ் தேர்ச்சி பெறவில்லை.