சேலம்:ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் திருவிழாவில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் கடைகள் தீ வைக்கப்பட்டதால் இன்று (மே.02) அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணாப்படுகிறது. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இத்தனை ஆண்டுகளாக இந்த திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே தலைமை ஏற்று நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மற்றொரு பிரிவினர், இந்த ஆண்டு திருவிழாவை நாங்களும் எடுத்து நடத்துவோம் எனக் கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (மே.02) இருதரப்பு பிரதிநிதிகளையும் அழைத்து, ஓமலூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு தீர்வும் காணப்படாததால், இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள், தீவட்டிப்பட்டி பகுதியில் இருந்த பேக்கரி, டீக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கடைகள் மீது கற்களை வீசி, தீ வைத்ததாக கூறப்படுகிறது. கலவரம் குறித்த தகவல் அறிந்ததையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட போலீசார், கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தடியடி நடத்தி, அப்பகுதியில் இருந்து கலையச் செய்தனர்.