திருநெல்வேலி:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களுடையை தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தின் பிராதான எதிர்க்கட்சியான அதிமுக நேற்று அதிமுக 16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டார். இதில் கடந்த 10 நாட்களுக்கு முன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழனுக்கு திருநெல்வேலி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த சிம்லா முத்துச்சோழன்?:முன்னாள் பெண் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள் தான் சிம்லா முத்துச்சோழன். இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தீவிர விசுவாசி . கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து களம் இறங்கினார் சிம்லா. அந்த தேர்தலில் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றாலும் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் என்ற முறையில் சிம்லா தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
அதன் பின்னர் திமுகவில் தீவிரமாக பணியாற்றிய அவருக்கு தேர்தலில் போட்டியிட போதிய வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகிய சிம்லா, திருநெல்வேலி மாவட்ட அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.