சென்னை: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் இருந்து, அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வினை நேரலையில் காண எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை, காவல் துறையினர் அகற்றி உள்ளதாக தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த எல்இடி திரைகள் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலரும் அயோத்தி நேரலையைக் காண்பதற்காக வைக்கப்பட்டு இருந்ததாக எஸ்ஜி சூர்யா தனது X தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள X சமூக வலைத்தளப் பதிவில், “காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கோயிலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற உள்ள பிரான் பிரதிஷ்டா நிகழ்வினை நேரலையில் காண இருந்தார். ஆனால், தற்போது கோயில் வளாகத்திற்குள் நுழைந்த தமிழ்நாடு காவல் துறையினர், அங்கிருந்த எல்இடி திரைகளை அகற்றினர். இது என்ன செயல்பாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில், தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். 466 எல்இடி திரைகள் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை நேரலைக்கு தயார் நிலையில் இருந்தது. தற்போது 400க்கும் மேற்பட்ட இடங்களில் புகுந்த காவல்துறையினர், திரைகளை பறிமுதல் செய்கின்றனர் அல்லது நேரலை ஒளிபரப்பை தடை செய்கின்றனர். இதனால், எல்இடி தொழிலாளர்கள் பயந்து ஓடுகின்றனர். திமுகவின் இந்து விரோதப்போக்கு சிறிய தொழில்களையும் தாக்குகிறது, அதாவது ‘வயித்திலே அடிப்பது’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.