தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் பல்கலை துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

SFI protest: பெரியார் பல்கலை துணைவேந்தர் மற்றும் பதிவாளரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரியார் பல்கலைகழகம்
இந்திய மாணவர் சங்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 3:40 PM IST

சேலம்:பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிமீறல் குற்றச்செயலில் ஈடுபட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரைத் தமிழக அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெரியார் பல்கலைக்கழகத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று(பிப்.15) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், விதிமீறல் குற்றச் செயல்கள் மற்றும் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் அமைப்பினர் மற்றும் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு விரைந்து, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெரியார் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்குச் சேலம் மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலாளர் பவித்ரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் உள்ளிட்டோரைக் கண்டித்து மாணவர் சங்கத்தினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் சம்சீர் அகமது மற்றும் மாநிலச் செயலாளர் அரவிந்த்சாமி ஆகியோர் கூறுகையில், “ சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, காவல் துறை உரிய விசாரணை மேற்கொண்டு, முறைகேடுகள் நிரூபணம் செய்யப்பட்ட பிறகும், இதுவரை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரைத் தமிழக அரசு தகுதி நீக்கம் செய்யவில்லை. மேலும், இப்பிரச்சனையில் தமிழக ஆளுநர் ஆர்.எரன். ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். எனவே, உடனடியாக இருவரையும் தமிழக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் இந்துத்துவா கொள்கைகளைப் பரப்பி வரும் செயல் நீடித்து வருகிறது. பெரியாரின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில், சாதிய, மத போதனைகள் அதிகம் அரங்கேறி, மாணவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் முறைகேடு மற்றும் விதிமீறல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகிய இருவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அவர்களது முறைகேடுகளைக் களைத்து, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் செயல்பட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:ஆளுநரின் செயல் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் காரியம் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details