சென்னை:நீலகிரி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய மோகனகிருஷ்ணனுக்கு எதிராக விசாகா குழுவில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய விசாகா குழு, மோகன கிருஷ்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், துறை ரீதியான விசாரணை முடியும் வரை அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தால் அவரை நீலகிரி மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்தில் பணியமர்த்த வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.
இதை எதிர்த்து மோகனகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது நெறி பிரண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுகமான சமூக பிரச்னையாகவும் உள்ளது. பாலியல் தொல்லை, பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்களை பாதிக்கச் செய்கிறது எனவும், இதன் காரணமாக பெண்கள் வேலையில் இருந்து விலகவும் தள்ளுகிறது எனத் தெரிவித்துள்ளார்.