சேலம்: ஏற்காட்டிலிருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்காட்டிற்குச் சென்ற பயணிகள் தனியார் பேருந்து, ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது 13ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்து கொண்டிருக்கும்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அதோடு பேருந்தின் பிரேக் பிடிக்காததால், பக்கவாட்டு தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. அதில், பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதில், 3 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். அதேபோல, மேலும் 3 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இறந்தவர்கள் அனைவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஏற்காடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.