தென்காசியில் லாரி மீது கார் மோதிய கோர விபத்து தென்காசி:தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் புளியங்குடியை சேர்ந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து சொக்கம்பட்டி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகவதி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக், வேல் மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ் உள்ளிட்ட ஆறு பேர் நேற்றிரவு (ஜன.27) புளியங்குடியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடந்த தெப்பத் திருவிழாவில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அங்கிருந்து காரில் குற்றாலம் சென்று விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
குற்றாலத்திலிருந்து இன்று (ஜன.28) அதிகாலை 3:30 மணி அளவில் புளியங்குடி நோக்கி இவர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், புளியங்குடி அருகில் உள்ள சிங்கிலிப்பட்டிற்கும், புன்னையாபுரத்திற்கு இடையே வந்து கொண்டிருந்தனர். அப்போது, கார் ஓட்டுநர் கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது. இதில், அவ்வழியாக கேரளா மாநிலத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் கார் மீது, லாரி ஏரி இறங்கியதாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கியதில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயரிழந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கோர சம்பவம் குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சொக்கம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீசார், தீயணைப்புத்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை இடிபாடுகளில் இருந்து மீட்டனர். இதனைத்தொடர்ந்து, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ்விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலையில் காரும், லாரியும் நேருக்கு நேராக மோதி கொண்ட இவ்விபத்தில் ஒரே பகுதியைச் சேர்ந்த 6 பேர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது எனக்கு உறுதுணையாக இருப்போம் என நினைத்து இருப்பார்" - சீமான்