தஞ்சாவூர்:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கன்னுக்குடிபட்டியை சேர்ந்தவர்கள் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குப் பாதயாத்திரையாக இன்று(புதன்கிழமை) காலை நடந்துச் சென்றுக் கொண்டு இருந்தனர்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி பகுதியில் திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நடந்து சென்ற பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சங்கீதா, லட்சுமி ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை.. விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!