திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல்(34). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா என்பவருடன் திருமணமாகி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வடிவேல் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வடிவேலுவை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் இன்று சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கிணற்றினுள் அடையாளம் தெரியாத பிரேதத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன, வடிவேலுவின் சடலம் தான் என அடையாளங்களைக் கொண்டு உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அழுகிய நிலையிலிருந்த வடிவேலின் உடலை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, வடிவேலுவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவனைக் கொன்று கிணற்றில் வீசிவிட்டு மனைவி நாடகம்:கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபழக்கத்திற்கு அடிமையான வடிவேல், அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டதாகவும், இதனை அக்கம்பக்கத்தினர் சமரசம் செய்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த வடிவேலின் மாமியார் மரியா, தனது கள்ளக்காதலனான பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும் கோவில்பாளையத்தில் உள்ள வடிவேலின் மாமனார் தேவராஜ் வீட்டில் வைத்து வடிவேலை தாக்கி கொலை செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடலை சாலையோரம் உள்ள கிணற்றில் யாருக்கும் தெரியாமல் வீசிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவி, மாமியார் உள்ளிட்டோர் கைது:அதன் பின்னர், கணவரை காணவில்லை என அவரது மனைவி உள்ளிட்டோர் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கர சம்பவம் குறித்து வடிவேலின் மனைவி திவ்யா, மாமியார் மரியா, மாமனார் தேவராஜ், மரியாவின் கள்ளக்காதலன் பாலாஜி, பாலாஜியின் கூட்டாளிகளான சோனை முத்து, பொன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்த மருமகனை மாமியாரே கள்ளக்காதலனை வைத்து கொலை செய்ததோடு, உடலை கிணற்றுக்குள் வீசிச் சென்றதும், நீண்ட நாட்களுக்குப் பின்னர் துர்நாற்றம் வந்த நிலையில், கிணற்றில் சடலம் மீட்கப்பட்டதும் என இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.