சேலம்: சேலம் அழகாபுரம் காவல் நிலையத்திற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்வி என்பவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தனது மகன் மற்றும் நண்பர்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேரை சிலர் கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவற்களைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை வேண்டியும் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அழகாபுரம் போலீசாருக்கு, கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நபர்கள் சேலம் அய்யந்திரு மாளிகை பகுதியில் உள்ள தனியார் சர்வீஸ் அபார்ட்மெண்ட்டில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று இளைஞர்களையும் மீட்டனர்.
மேலும், அவர்களது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததை அடுத்து, மூவரையும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அழகாபுரம் போலீசார் கூறுகையில், "ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சூரியமூர்த்தி - செல்வி தமபதியின் மகன் வெங்கடேஷ் (29) என்பவர் தொழில் ரீதியாக சேலம் வந்துள்ளார்.
சேலம் அழகாபுரம் கான்வென்ட் ரோட்டில் உள்ள அவரது உறவினரான அந்தோணி ராஜ் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கன்னங்குறிச்சி 13வது வார்டு திமுக செயலாளர் மகேந்திரன் அறிமுகமாகி உள்ளார். அதனை அடுத்து, மகேந்திரன் கோயம்புத்தூர் அடுத்த காரமடையில் 16 பிளாட் போட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், அந்த நிலத்தை 2 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி, முதல் தவணையாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை மகேந்திரனின் வங்கிக் கணக்கிற்கு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளார். இதனிடையே, தொழில் சம்பந்தமாக பணம் தேவைப்படுவதாகக் கூறி மகேந்திரனிடம் 27 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.