சென்னை: தாம்பரம் அடுத்த, இரும்புலியூர் ஏரிக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ராஜா (28). இவர் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு (திங்கட்கிழமை) சுமார் 11.30 மணி அளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ சவாரிக்காக நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், கார்த்திக் ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி தாக்கியதில் கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன் குமார் தலைமையில், உதவி ஆணையர் நெல்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
மேலும், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க:தாம்பரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
இந்த நிலையில், கார்த்திக் ராஜா கொலை வழக்கில், ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகளான ரஞ்சித், கெவின், ஷாம், அஜித் என ஐந்து பேர் தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கார்த்திக் ராஜா மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதும், அவர் ஆட்டோ ஸ்டாண்டில் உறுப்பினராக இல்லாமலே ஆட்டோ ஓட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், தாம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டும் ஆனந்தன் மற்றும் கார்த்திக் ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக, உறுப்பினராக இல்லாமல் இப்பகுதியில் ஆட்டோ ஓட்டக்கூடாது என ஆனந்தன் கூறியதற்கு, "நான் இங்கு தான் ஆட்டோ ஓட்டுவேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ, செஞ்சிக்கோ" என கார்த்திக் ராஜா கூறியதாக தெரிய வந்துள்ளது.
இந்த தகராறில் ஆத்திரமடைந்த ஆனந்தன், தாம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் சவாரிக்காக ஆட்டோவுடன் நின்று கொண்டு இருந்த கார்த்திக் ராஜாவை, கூட்டாளிகளுடன் ஒன்று சேர்ந்து கொலை செய்து இருப்பதும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிரிழப்பு.. தந்தை தற்கொலை!