சென்னை:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சையும், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
அதன் பின்னர், உடல் நிலை சரியானதும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், புழல் சிறையில் உள்ள அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும் ஒரு ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.